கணேமுல்ல சஞ்சீவ படுகொலை; செவ்வந்தி வெளிப்படுத்திய மேலதிக தகவல்
நீதிமன்றில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட பாதாள உலக கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடமிருந்து பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்தார்.

சஞ்சீவ கொலைக்கு பின்னால் 5 பேர்
இந் நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு பின்னர் ஒக்டோபர் 15 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கணேமுல்ல கொலைக்கு பின்னால் 5 பேர் செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள “கெஹெல்பத்தர பத்மே” என்பவரின் தலைமையில் கணேமுல்ல கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கணேமுல்ல கொலை திட்டத்திற்கு பின்னால் கெஹெல்பத்தர பத்மே , கமாண்டோ சலிந்து , தருன், பிரதான துப்பாக்கிதாரி மற்றும் இஷாரா செவ்வந்தி ஆகிய ஐவரும் பிரதானதமாக செயற்பட்டுள்ளதாக விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
அத்துடன், இஷாரா செவ்வந்தியின்ட தாயாரின் இறுதி சடங்கை காணொளி எடுத்து அவருக்கு அனுப்பிய இஷாரா செவ்வந்தியின் மாமா தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளன.
அதேவேளை இஷாரா செவ்வந்தியின் மாமா தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.