கட்டுநாயக்க விமான நிலையத்தில் 454 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் இந்தியர் கைது
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 454 மில்லியன் ரூபாய் சந்தைப் பெறுமதியுடைய கொக்கைன் மற்றும் எக்ஸ்டசி (Ecstasy) போதைப்பொருட்களுடன் 46 வயதுடைய இந்தியப் பிரஜை ஒருவர் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொழிலால் பொறியியலாளரான இவர், கட்டார் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான QR 654 என்ற விமானத்தில் பிரான்ஸின் பாரிஸிலிருந்து தோஹா வழியாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இதன்போது, குறித்த பயணி கொண்டு வந்த பயணப் பொதிகளைச் சோதனையிட்ட சுங்க அதிகாரிகள், அவற்றிலிருந்து பெருமளவிலான போதைப்பொருட்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக பரிசோதனைகளில், மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் கொக்கைன் மற்றும் எக்ஸ்டசி வகையைச் சேர்ந்தவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றின் மொத்தச் சந்தைப் பெறுமதி சுமார் 454 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை, மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.