கொழும்பு துறைமுகத்தில் தேங்கி நிற்கும் உப்பு ; அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ள சங்கம்
கொழும்பு துறைமுகத்தில் 45 நாட்களாக தேங்கி நிற்கும் 800 மில்லியன் ரூபாய் பெறுமதியான 400 உப்பு கொள்கலன்களை உடனடியாக விடுவிக்குமாறு, இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சிறுபோகப் பருவத்திலிருந்து உப்பு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2024 ஆம் ஆண்டு பெரும்போக பருவத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக உப்பு உற்பத்தி மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்தார்.
இதன் விளைவாக, இலங்கையால் பாதுகாப்பான உப்பு இருப்புகளைப் பராமரிக்க முடியவில்லை, இதனால் வருடாந்த தேசிய தேவையான 185,000 மெட்ரிக் டன்களை பூர்த்தி செய்ய உப்பை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில உப்புப் பொதிகள் இலங்கையின் பொதியிடல் விதிமுறைகளின் கீழ் தேவைப்படும் தகவல்களைக் காண்பிக்கத் தவறிவிட்டதாக அமரசிங்க குறிப்பிட்டார்.
மேலும் 800 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 11,200 மெட்ரிக் டொன் உப்பு கொண்ட 400 கொள்கலன்கள் கப்பல் நிறுவனப் பிரச்சினைகள் காரணமாகத் தாமதமாகியுள்ளதாகச் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சமிந்த ருசிரு மாலியத்த தெரிவித்துள்ளார்.
இந்த கொள்கலன்களை உடனடியாக விடுவிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.