மருத்துவப் பரிந்துரையின்றி மயக்க மாத்திரை விற்பனை ; மருந்தக உரிமையாளர் கைது
மருத்துவப் பரிந்துரையின்றி மயக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் மாத்திரைகளை விற்பனை செய்ததாகக் கூறப்படும் மருந்தக உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹெம்மாத்தகம, கம்பளை சந்திப் பகுதியில் உள்ள மருந்தகமொன்றின் உரிமையாளரான 41 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண், போதைப்பொருள் மாத்திரைகளைப் பயன்படுத்துவோர் மத்தியில் “பெத்தி அக்கா” என அழைக்கப்படுவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கேகாலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர் மற்றும் ஹெம்மாத்தகம காவல் நிலையப் பொறுப்பதிகாரி சமிந்த குணரத்ன ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய, காவல்துறை பரிசோதகர் சமன் குமார உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, காவல்துறையினரால் உத்தி நடவடிக்கைக்காக பொதுமகன் ஒருவர் பயன்படுத்தப்பட்டுள்ளார்.
அவருக்கு 500 ரூபாய் பணம் வழங்கப்பட்டு, மருத்துவப் பரிந்துரைச் சீட்டின்றி மயக்கத்திற்காகத் தவறாகப் பயன்படுத்தப்படும் வகையிலான மாத்திரைகளை கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்தச் சந்தர்ப்பத்தில் குறித்த மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில், சந்தேகநபர் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்களுக்கு மருத்துவப் பரிந்துரையின்றி குறித்த மாத்திரைகளை விற்பனை செய்ததாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவனெல்ல, கம்பளை, அரநாயக்க, ஹோரேவல மற்றும் திப்பிட்டிய உள்ளிட்ட பகுதிகளுக்கு உந்துருளிகள் மூலம் நபர்களை அனுப்பியும், சில சந்தர்ப்பங்களில் சந்தேகநபர் தானே உந்துருளியில் சென்று மாத்திரைகளை விநியோகித்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹெம்மாத்தகம காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.