பொலிஸாரை உடனே தொடர்பு கொள்ள புதிய அலைபேசிச் செயலி அறிமுகம்
அவசர கால நிலைமையின் போது விரைவாக பொலிஸாருக்குத் தெரியப்படுத்துவதற்காக புதிய அலைபேசிச் செயலி (Mobile App) ஒன்றை அறிமுகப்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
"Sri Lanka Police App" என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலியில், தேசிய அடையாள அட்டை வைத்துள்ள எந்தவொரு இலங்கையரும் பதிவு செய்ய முடியும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.
இந்தச் செயலியில் உள்ள SOS பொத்தானை அவசர காலத்தில் 10 வினாடிகள் அழுத்தி இயங்கச் செய்வதன் மூலம், குறிப்பிட்ட நபர் இருக்கும் இடம் தொடர்பான தகவல்களை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அனுப்ப முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

119 அவசர அழைப்பு இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்குத் தெரியப்படுத்துவதுடன், இந்தச் செயலியின் மூலமாகவும் விரைவாகத் தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
குழந்தைக்கு ஏதேனும் விபத்து அல்லது அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ள சந்தர்ப்பத்தில் கூட இந்தச் செயலியின் மூலம் பொலிஸாருக்குத் தெரியப்படுத்த முடியும் என்றும், அது தொடர்பில் பொலிஸார் விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
Play Store ஊடாக Sri Lanka Police App செயலியைப் பதிவிறக்கம் செய்து பதிவு செய்ய முடியும் என்பதுடன், தேசிய அடையாள அட்டை உள்ள சிறுவர்களுக்கும் இதில் பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
மேலும், இந்த பொலிஸ் செயலியைத் தவறாகப் பயன்படுத்த முடியாது என்றும், 2025 ஆம் ஆண்டில் 119 அவசர அழைப்பு இலக்கத்தைத் தவறாகப் பயன்படுத்திய 91 நபர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.