அரச சொத்து துஷ்பிரயோகம்; தயாசிறி ஜயசேகர- சபாநாயகர் கடும் வாக்குவாதம்
அரச சொத்து துஷ்பிரயோகம் தொடர்பில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சிறப்புரிமை மீறல் பிரச்சினையாக தாம் முன்வைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (10) பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் கீழான தீர்மானம் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சபாநாயகர் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் நடுநிலையாக செயற்பட வேண்டும் எனத் தெரிவித்த தயாசிறி ஜயசேகர, சபாநாயகருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இதன்போது, தாம் முன்வைத்துள்ள சிறப்புரிமை மீறல் பிரச்சினை பரிசீலிக்கப்பட்டு வருவதால், அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை சபையில் பேச வேண்டாம் என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த தயாசிறி ஜயசேகர, “உங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை ஒவ்வொன்றாக முன்வைக்கும் போது அதனை கேட்டுக்கொண்டிருக்க முடியாவிடின், நீங்கள் சபையில் இருந்து வெளியேறுங்கள். பிரதி சபாநாயகரை சபைக்குத் தலைமை தாங்குவதற்கு குறிப்பிடுங்கள்” எனத் தெரிவித்தார்.