அரசாங்கத்தின் 22ஆவது திருத்தத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கடும் எதிர்ப்பு
அரசாங்கம் நீதித்துறையை முடக்கி, நாட்டில் சர்வாதிகார ஆட்சியை உருவாக்குவதற்கு முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்தத் திருத்தம் நீதித்துறையின் சுயாதீனத்தையும் செயற்பாட்டுத் திறனையும் பலவீனப்படுத்தக்கூடியதாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் நீதித்துறையைச் செயலிழக்கச் செய்வதன் ஊடாக நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பை பலவீனப்படுத்தி, சர்வாதிகார ஆட்சிக்கான சூழலை உருவாக்க முயற்சிப்பதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நீதித்துறையின் சுயாதீனம் ஜனநாயக ஆட்சியின் முக்கிய தூண்களில் ஒன்றாகும் எனக் குறிப்பிட்ட அவர், அதனைப் பலவீனப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிராக குரல் எழுப்ப வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அரசாங்கம் உரிய விளக்கங்களை வழங்க வேண்டும் எனவும், நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.