இலங்கையில் அதிகரிக்கும் யானைகளின் மரணங்கள் ; சுற்றாடல் அமைச்சு எச்சரிக்கை
யானைகள் தினத்தை முன்னிட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சுற்றாடல் அமைச்சு, சூழல் தொகுதியின் தனித்துவமான அடையாளமாகவும், பல்லுயிர் பெருக்கத்தின் தீர்மானமிக்கதாக விளங்கும் யானைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து இந்த சந்தர்ப்பத்தில் உலகத்தின் அவதானம் திரும்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
பல வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற முறையற்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக யானைகளின் நடமாட்டப் பாதைகள் மற்றும் யானை வழித்தடங்கள் தடைப்பட்டதால், பாதகமான சுற்றுச்சூழல் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலக யானைகள் தினம் இன்று அனுசரிக்கப்பட்ட போதிலும், நாட்டில் தற்போது யானைகளின் எண்ணிக்கை குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாக சுற்றாடலியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த வருடத்தில் இதுவரை நாட்டில் 199 யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இவற்றில் பெரும்பாலான மரணங்கள் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்டுள்ளதுடன், பாதுகாப்பற்ற மின்சாரக் கம்பிகளில் சிக்குதல் மற்றும் பாதுகாப்பற்ற விவசாயக் கிணறுகளில் விழுதல் ஆகியவற்றினாலும் யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்த ஒன்றியத்தின் செயலாளரான சுற்றாடலியலாளர் நயனக ரன்வெல்ல தெரிவித்துள்ளார்.