சாய்ந்தமருது மத்ரஸா மாணவனின் மரண வழக்கு: வெளியான புதிய தகவல்!
அம்பாறை - சாய்ந்தமருது மத்ரஸா மாணவனின் மரணம் தொடர்பிலான சிசிரிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப் பொருட்களை அழித்த குற்றச்சாட்டு பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிசிரிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4 சந்தேக நபர்களையே கல்முனை நீதிமன்ற கட்டளைக்கமைய சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாணவனின் மரண வழக்கு, கடந்த வியாழக்கிழமை (15-02-2024) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது மௌலவியின் வேண்டுகோளுக்கு இனங்க சிசிரிவி காணொளிகளை அழித்தவர்களை இனங்கண்டு கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதன்படி இன்றையதினம் (20-02-2024) சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு சிசிரிவி தொழிநுட்பவியலாளர் உள்ளிட்ட 4 பேர் வரவழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் ரவூப் தலைமையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைதான 4 சந்தேக நபர்களையும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் நாளை (21) ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.