ரஷ்யா தாக்குதல் ; மயிரிழையில் தப்பித்த ஐரோப்பிய தூதுவர்கள் மற்றும்போரிஸ் ஜொன்சன்!
உக்ரைன் – போலந்து எல்லைக்கு அருகே பயணிகள் ரயில் ஒன்றின் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. ட்ரோன் நெருங்கியதை முன்கூட்டியே அறிந்ததால், பயணிகள் ரயிலிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜொன்சன், ஸ்வீடனின் முன்னாள் பிரதமர் காரல் பில்ட் உள்ளிட்ட ஐரோப்பிய தூதுவர்கள் பயணித்த ரயில் ஒன்று சம்பவ இடத்தை கடந்து சென்ற சில நிமிடங்களுக்குப் பின்னர், அதே வழித்தடத்தில் சென்ற மற்றொரு பயணிகள் ரயில் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய தூதுவர்கள் பயணித்த ரயில்
நேட்டோ உறுப்பு நாடான போலந்தின் எல்லையிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவிலிருந்து திரும்பும் வெளிநாட்டு பிரதிநிதிகள் அதிகளவில் பயன்படுத்தும் முக்கியமான ரயில் வழித்தடமாகவும் இது காணப்படுகின்றது.
அதேவேளை ரஷ்யப் படைகளின் தொடர் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக ரயில்களின் நேர அட்டவணை நிகழ்நேரத்தில் மாற்றியமைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தூதுவர்கள் பயணித்த ரயில் திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே புறப்பட்டுச் சென்றுள்ளது. எனவே, ரஷ்யாவின் உண்மையான இலக்கு தூதுவர்கள் பயணித்த ரயிலாக இருக்கலாம் என உக்ரைன் ரயில்வே நிர்வாகம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இதே பகுதியில் மற்றொரு சரக்கு வாகனமும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேட்டோ எல்லைக்கு அருகில் ரஷ்யா மேற்கொண்டுள்ள இத்தகைய தாக்குதல்களை போலந்து கடுமையாக கண்டித்துள்ளதுடன், இது ‘அத்துமீறலின் உச்சகட்டம்’ என தெரிவித்துள்ளது.
எனினும், ஐரோப்பாவிலிருந்து வரும் இராணுவத் தளவாடங்களை ஏற்றிச் செல்லும் கட்டமைப்புகளையே தாங்கள் இலக்கு வைத்ததாக ரஷ்யா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.