லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.11,000 கோடி முதலீடு ; 7000 பேருக்கு வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில் சுமார் இந்திய மதிப்பில் 11,000 கோடி ரூபாய் முதலீட்டில் 7000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் லண்டனில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு, லண்டனில் வசிக்கும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று (14) லண்டனில் நடைபெற்ற முதலீட்டாளர் சந்திப்பில், சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.) நிறுவனம், அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இதன்படி, வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு மற்றும் தளபாட வசதிகள் உள்ளிட்ட துறைகளில் சுமார் 11,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படவுள்ளதுடன், சுமார் 7000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres – GCCs) நிறுவுவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் மேலும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனம், சென்னையில் உலகளாவிய திறன் மையம் ஒன்றை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் மற்றும் ஏர்ன்ஸ்ட் & யங் (Ernst & Young) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
சுமார் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவுள்ள இந்த மையத்தின் ஊடாக 2000க்கும் மேற்பட்ட உயர் மதிப்புடைய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.
இந்த மையம், சென்னையின் மவுண்ட் பூந்தமல்லி வீதியில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள GCC கொரிடார் பகுதியில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுவீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப் (Sigma Technology Group), தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் (Sria Solutions) மூலம், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் இயங்கி வரும் உலகளாவிய திறன் மையங்களை விரிவுபடுத்துவதற்கும் உறுதியளித்துள்ளது.
இதன்மூலம் எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட துறைகளில் 600 உயர் மதிப்புடைய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சர் விஜய் முன்னிலையில், சிக்மா டெக்னாலஜி குரூப் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் கார்ல்சன், ஸ்ரியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப் IAS ஆகியோருக்கு இடையே பரிமாறிக் கொள்ளப்பட்டது.
இந்த முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி மற்றும் உயர்தர வேலைவாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.