மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு விதிக்கப்பட்ட 15 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி
மகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்ட சந்தேகநபருக்கு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 15 வருட கடூழிய சிறைத்தண்டனையை மேன் முறையீட்டு நீதிமன்றம் திங்கட்கிழமை (14) உறுதி செய்தது. நீதிபதி அமல் ரணராஜா, நீதிபதி சுமுது பிரேமச்சந்திர ஆகியோர் அடங்கிய மேன் முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நேற்றைய தினம் மேற்படி வழக்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதிவாதி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டில் எவ்வித அடிப்படையும் இல்லை என நீதிபதிகள் அமர்வு குறித்த மேன்முறையீட்டை தள்ளுபடி செய்திருந்தது.
2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தன் மகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் குறித்த நபாருக்கு எதிராக 3 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் நீண்ட விசாரணையின் பின்னர், தண்டனைச் சட்டக் கோவையின் 364(3) பிரிவின் கீழ், ஒரு குற்றச்சாட்டில் அவர் குற்றவாளியாக காணப்பட்டதை அடுத்து அம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம், 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்தது. ஏனைய இரண்டு குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுவித்திருந்தது.
சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 10 ஆயிரம் ரூபா அபராதமும், பாதிக்கப்பட்ட மகளுக்கு 4 இலட்சம் ரூபா இழப்பீடு செலுத்துமாறு உத்தரவிடப்பட்டது.
அபராதம் மற்றும் இழப்பீடு செலுத்தத் தவறும் பட்சத்தில் தலா 6 மாதங்கள் மேலதிக சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
சம்பவம் இடம்பெற்ற நேரம் அல்லது திகதி தெளிவில்லையெனவும், மகளின் சாட்சியத்தை நம்ப முடியாது எனக் கூறியும் பிரதிவாதி மேன்முறையீடு செய்திருந்தார்.
எனினும், முறைப்பாட்டாளரின் சாட்சியங்கள் மிகவும் நம்பகமானவை எனத் தெரிவித்த நீதிபதி கலாநிதி சுமுது பிரேமசந்திர, மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட எவ்வித அடிப்படை காரணமும் இல்லை எனக் குறிப்பிட்டார்.
அதற்கமைய குற்றவாளியின் மேன்முறையீட்டை நிராகரித்த நீதிமன்றம், 2025 ஜூலை 16 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட 15 வருட கடூழிய சிறைத்தண்டனை, அபராதம் மற்றும் இழப்பீடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்துமாறும் உத்தரவிட்டது.