காந்தாரா நடிகையின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து பரப்பிய மூவர் கைது
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காந்தாரா திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற பிரபல நடிகை ருக்மிணி வசந்தின் (Rukmini Vasanth) உருவத்தை, தவறாக சித்தரித்து சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு நகர சைபர் குற்றப் பிரிவு காவல்துறையினரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Deepfake மார்ஃபிங் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்
போலியாக உருவாக்கப்பட்ட Deepfake மார்ஃபிங் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், தனியுரிமையை மீறும் வகையிலும் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக நடிகை ருக்மிணி வசந்த் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்தத் தரவுகள் தனக்குப் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் நடிகை ருக்மிணி வசந்த் முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சம்ஹிதா (BNS) ஆகியவற்றின் கீழ் குற்ற எண் 36/2026 இன் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரம் குறித்துப் புலனாய்வு செய்து, போலி உள்ளடக்கங்களை உருவாக்கிப் பரப்பியவர்களைக் கண்டறிவதற்காகக் காவல்துறையினரால் சிறப்புப் புலனாய்வுக் குழுவொன்று அமைக்கப்பட்டது. தீவிர விசாரணையை அடுத்தே தற்போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.