ATM அட்டையுடன் தனியார் வகுப்புக்கு சென்ற மாணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
தனியார் வகுப்புக்கு வந்த மாணவனை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விட்டு, 67,000 ரூபாயை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் காருடன் கைது செய்யப்பட்டதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் இருந்து அனுராதபுரத்திற்கு தனியார் வகுப்புக்கு வந்த மாணவனிடம் இருந்தே, கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பஸ்ஸூக்காக காத்திருந்த மாணவன்
தனியார் வகுப்புகள் முடிந்ததும் அநுராதபுரம் புதிய நகரில் பஸ்ஸூக்காக காத்திருந்த 18 வயதுடைய மாணவன் அருகில் காரில் வந்த நின்றுள்ளது.
அதில் இருந்த நான்கு பேர் கத்தியைக் காட்டி மாணவனை, காருக்குள் பலவந்தமாக ஏற்றிக்கொண்டு, ஆள் நடமாட்டமற்ற இடத்திற்கு அழைத்துச் சென்று, அவரிடமிருந்த 2000 ரூபாய் பணத்தை அபகரித்ததுடன், வங்கி அட்டையையும் கைப்பற்றினர்.
அதன்பின்னர், வங்கி தன்னியக்க இயந்திரம் இருக்கும் இடத்துக்கு சென்றவர்கள், அந்த மாணவனை அச்சுறுத்தி, இரகசிய இலக்கத்தை கேட்டு, வங்கி அட்டையில் இருந்து 65000 ரூபாவை வலுக்கட்டாயமாக எடுத்துக்கொண்டு, மாணவனை சிறிது தூரத்தில் இறக்கிவிட்டுவிட்டு காருடன் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் நேற்று (30) கைது செய்யப்பட்டதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
விஜய புர பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரும், ஹிடோகம பஹல் தருவில பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.