பாடசாலை விடுதியில் கொள்ளை : தந்தை, தாய், மகன் கைது!
பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் பிரதி அதிபருக்கு வழங்கப்பட்ட விடுதியினை உடைத்து மடிகணினி மற்றும் தங்க ஆபரணங்கள், பாடசாலையில் பாவனைக்கு வைக்கப்படிருந்த எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றை திருடிய ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், 15 வயது மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தந்தை, தாய் ஆகியோரை எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் 15வயது மகனை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறு அட்டன் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணை
இன்று (12) சந்தேக நபர்கள் அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
பொகவந்தலாவை பாடசாலையொன்றின் பிரதி அதிபரின் விடுதியினை உடைத்து விடுதியில் இருந்த மடிகணினி மற்றும் தங்க ஆபரணங்கள் எரிவாயு நிரப்பும் சிலிண்டர் என்பன நேற்று (11) திருடப்பட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொகவந்தலாவை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணையில் பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்டபகுதியில் உள்ள வீடு ஒன்றை பொகவந்தலாவை பொலிஸார் சோதனையிட்டனர்.
சோதனையிட்ட போதே குறித்த வீட்டில் திருடப்பட்ட மடிகணினி, தங்க ஆபரணங்கள், எரிவாயு நிரப்பும் சிலிண்டர் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.