தமிழர் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து கொள்ளை : இளைஞர் கைது
அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து 2 பவுண் நகை மற்றும் ஒரு இலட்சம் ரூபா பணம் திருடப்பட்டதாக வீட்டு உரிமையாளர் நேற்று (11) சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து இன்று சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
சம்மாந்துறை - 3 பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 3 கிராம் 20 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றியதோடு, வீட்டில் திருடிச் சென்ற 2 பவுண் நகையையும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவினர் மீட்டுள்ளனர்.
சந்தேக நபரோடு குற்றச் செயலுக்கான சான்றுப்பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.