வழக்கு விசாரணையில் அதிரடி திருப்பம் ; ரிஷாட் மேன்முறையீட்டு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
மன்னார் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு தொடர்பான விசாரணையில் இருந்து இரண்டாவது நீதியரசரும் விலகியுள்ளார்.
வழக்கு, உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஏ.எச்.எம்.டி. நவாஸ், சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது, தனிப்பட்ட காரணங்களை குறிப்பிட்டு நீதியரசர் ஏ.எச்.எச்.டி. நவாஸ் வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதனையடுத்து, வழக்கை வேறு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் 2026 செப்டம்பர் 09ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகிலுள்ள காடுகளை அழித்து மீள்குடியேற்றம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்டோருக்கு எதிராக சுற்றுச்சூழல் நீதி மையம் 2015ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
அந்த வழக்கை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், காடுகள் அழிக்கப்பட்டதற்கு முன்னாள் அமைச்சர் பொறுப்புக்கூற வேண்டும் என்றும், மீள்காடுகள் வளர்ப்பு செலவாக சுமார் 106 கோடி ரூபாய் வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்த தீர்ப்பை ரத்து செய்யுமாறு கோரி ரிஷாட் பதியுதீன் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் முன்னதாகவும் பல நீதியரசர்கள் விலகியிருந்த நிலையில், தொடர்ச்சியான விலகல்கள் வழக்கின் போக்கு குறித்து சட்ட மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.