உரம் இன்றி வாடும் நெற்பயிர்கள் ; விவசாயிகள் அவதி
உரங்களைச் சரியான முறையில் பயன்படுத்த முடியாமை காரணமாக, தமது விவசாய நிலங்களிலுள்ள நெற்பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறி வருவதாகப் புலஸ்திகம பகுதி விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பொலன்னறுவை மாவட்டத்தின் லங்காபுர பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அபயபுர மற்றும் புலஸ்திகம ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளே இந்தச் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.

தற்போது பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு 17 முதல் 30 நாட்களாகியுள்ள நிலையில், அரசாங்கத்தினால் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட உர மானியம் இதுவரை தமக்குச் சரியாகக் கிடைக்கவில்லை என விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அரசாங்கத்தினால் 15,000 ரூபாவிற்குப் தனியார் துறையினரிடம் கொள்வனவு செய்யப்படும் உரங்கள், தமக்கு 10,200 ரூபாவிற்கு வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும், இதுவரை அந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது ஆங்காங்கே சுமார் 200 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவிலான நெற்பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கும் விவசாயிகள், இந்தத் துயர நிலைக்கு உடனடித் தீர்வை வழங்கி, தமக்குத் தேவையான உரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை விரைவாக ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.