மட்டக்களப்பில் ஓய்வுபெற்ற ஆசிரியர் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு திசவீரசிங்கம் சதுக்கம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (23) ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
திசவீரசிங்கம் சதுக்கம், ஆறாம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையிலிருந்த 71 வயதுடைய ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தன்று, வீட்டிலிருந்த பணிப்பெண் வெளியில் சென்று வீடு திரும்பிய நிலையில் குறித்த ஆசிரியரை காணாத நிலையில் கிணற்றிற்குள் சடலமாக இருப்பதை கண்டு ஏனையவர்களுக்கு தெரியப்படுத்திய நிலையில் இது தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நசீர் சம்பவ இடத்திற்கு வருகைதந்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன் சடலத்தினை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறு பணிப்புரை விடுத்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.