புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை
பேரனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு, உலகத் தமிழர் சமூகத்தின் ஒருங்கிணைந்த மனிதாபிமான உதவிகள் இன்றியமையாதவையாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அனைத்துலகத் தமிழர் பேரவை, உலகம் முழுவதும் உள்ள சகல புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும் ஒற்றுமையுடன் இணைந்து வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளை பேரனர்த்த அழிவில் இருந்து மீளக்கட்டியெழுப்ப முன்வரவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளது.
'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டள்ளனர்.

இலங்கைக்கு உதவி
இந்நிலையில் சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பல வழிகளிலும் இலங்கைக்கு உதவிகளை வழங்கிவருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு உலகநாடுகளைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் ஒன்றிணையவேண்டும் என வலியுறுத்தி அனைத்துலகத் தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறுப்பட்டிருப்பதாவது:
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அவதியடைந்து வருகின்றன.
மக்களின் வீடுகள், அத்தியாவசியப்பொருட்கள் மற்றும் வாழ்வாதாரம் என அனைத்தும் சீர்குலைந்திருக்கும் நிலையில், உலகத் தமிழர் சமூகத்தின் ஒருங்கிணைந்த மனிதாபிமான உதவிகள் இவ்வேளையில் இன்றியமையாதவையாகியுள்ளன.
எனவே உலகம் முழுவதும் உள்ள சகல புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும் ஒற்றுமையுடன் இணைந்து வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளை பேரனர்த்த அழிவில் இருந்து மீளக்கட்டியெழுப்ப உதவுமாறு அழைப்பு விடுக்கிறோம். அதேவேளை இலங்கையில் பாதிக்கப்பட்டோருக்கு அவசியமான உதவிகளை முறையாகத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கென 7 பேர் கொண்டு சிறப்புக்குழுவொன்றை நிறுவியுள்ளோம்.
களத்தில் உள்ள அவசர தேவைகளை மதிப்பாய்வு செய்தல், களத்தில் நம்பகமான கூட்டாளர்களுடன் இணைந்து செயற்படல், நிதி மற்றும் வளங்களை ஒருங்கிணைத்தல், உதவிப்பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படுவதைக் கண்காணித்தல், புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களுக்கு சமகாலத் தகவல்களை வழங்கல் உள்ளிட்ட பணிகள் இக்குழுவின் ஊடாக முன்னெடுக்கப்படும்.
இது சாதாரண உதவி கேட்கும் தருணம் அல்ல. மாறாக இது தமிழர்களின் ஒற்றுமை வெளிப்படவேண்டிய வரலாற்று முக்கியத்துவம் மிக்க தருணமாகும். நம் தாயகம் நம்மை நாடுகிறது. இவ்வேளையில் நாமனைவரும் ஒன்றிணைந்து உதவினால் மட்டுமே நாட்டின் மீட்சி துரிதமடையும்.
ஆகவே அனைவரும் இணைந்து கைகோர்த்து, இந்த மனிதாபிமான முயற்சியில் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.