கபில சந்திரசேன மரணம் தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
கொழும்பு கொள்ளுப்பிட்டிய, பேதிரிஸ் மாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீட்டில் இன்று (08) காலை கபில சந்திரசேனவின் சடலத்தை பொலிஸார் மீட்டனர். குறித்த வீட்டின் அறையொன்றில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு
இன்று முற்பகல் கொழும்பு தடயவியல் மருத்துவ அதிகாரியும் அந்த இடத்திற்கு வருகை தந்திருந்தார். இச்சம்பவம் குறித்து கொள்ளுப்பிட்டிய பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றில் தெரிவிக்கையில்,
இதனை ஒரு சந்தேகத்திற்கிடமான மரணமாகக் கருதி மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தனர். இதற்கிடையில், சம்பவ இடத்தைப் பார்வையிட கோட்டை நீதவான் பசன் அமரசேனவும் வருகை தந்திருந்தார்.
2013-ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக 06 எயார்பஸ் A-330 மற்றும் 08 எயார்பஸ் A-350 ரக விமானங்களை கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாக கபில சந்திரசேன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவை மீண்டும் கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று (07) பிடியாணை பிறப்பித்திருந்த நிலையிலேயே, இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.