விடுதலை செய்யப்பட்ட வைத்தியர் ஷாபியின் நிலுவை சம்பளத்தை செலுத்த உத்தரவு!
விடுதலை செய்யப்பட்ட வைத்தியர் ஷாபியின் அனைத்து நிலுவைச் சம்பளத்தையும் செலுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மருத்துவப் பிரிவின் மருத்துவர் ஷாபி சஹாப்தீன்.
இவர் நாட்டில் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளை செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டு, நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டார்.
அதனையடுத்து அவருக்கு செலுத்த வேண்டிய அனைத்து நிலுவைச் சம்பளத்தையும் செலுத்துமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி சானக அபேவிக்ரம (Sanaka Abeywickrema) தெரிவித்துள்ளார்.
கருத்தடை அறுவை சிகிச்சை செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டு மருத்துவர் ஷாபி சிஹாப்தீன் கைது செய்யப்பட்ட பின்னர்,பணி நீக்கம் செய்யப்படாமல் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் அவரது சம்பள நிலுவையை செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி மருத்துவர் ஷாபி சிஹாப்தீன், சிங்கள பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார் என்ற சர்ச்சைக்குரிய செய்தியை சிங்கள பத்திரிகை வெளியிட்டிருந்தது. அதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணைகளை நடத்திய குற்றவியல் விசாரணை திணைக்களம், மருத்துவர் ஷாபிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகவில்லை.
இதனால், கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்களுக்கு பின்னர் அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் திகதி மருத்துவர் ஷாபி பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.