வங்காள விரிகுடா ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடிப் படகுகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, கிழக்கு-மத்திய வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடற்பரப்புகளில் நிலவும் குறைந்த அழுத்தப் பிரதேசம், மேற்கு நோக்கி நகர்ந்து வடமேற்கு திசையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கிலோமீற்றர் வரை
இது இன்றைய தினம் குறைந்த அழுத்தப் பிரதேசமாகவும், (Depression), நாளைய தினம் தீவிர குறைந்த அழுத்தப் பிரதேசமாகவும், (Deep Depression) வலுவடைவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
செப்டெம்பர் 23 ஆம் திகதியளவில் இது வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்காள விரிகுடா பகுதியைச் சென்றடையக்கூடும்.
குறித்த கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கிலோமீற்றர் வரை அவ்வப்போது அதிகரிக்கக்கூடுவதுடன், கடல் கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
மேலும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடற்பரப்புகளில் இடிமின்னலுடன் கூடிய பலத்த மழையுடன் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மறுஅறிவித்தல் வரை அக்கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும், தற்போது அப்பகுதிகளில் தங்கியுள்ள மீன்பிடிப் படகுகளைப் பாதுகாப்பான கடற்பகுதிகளுக்கு நகர்த்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.