சவூதி சென்ற இலங்கை பெண்ணை 14 ஆண்டுகளாக காணவில்லை
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சவூதி அரேபியா சென்ற இலங்கை பெண் ஒருவர் கடந்த 14 ஆண்டுகளாக எவ்வித தகவலும் இன்றி காணாமல் போயுள்ளதாக அம்பன்பொல பகுதியில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அம்பன்பொல, சேருகொட பகுதியைச் சேர்ந்த ராஜபக்ஷலாகே நிலூகா ராஜபக்ஷ என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

ஆவணங்கள் மற்றும் தகவல்களின்படி, அவர் 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதி சவுதி அரேபியா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அவர் வெளிநாடு சென்றது முதல் கடந்த 14 ஆண்டுகளாக அவரைப் பற்றிய எவ்வித உறுதியான தகவலும் கிடைக்கவில்லை என அவரது குடும்ப உறவினர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் உறவினர்கள் பலமுறை முறைப்பாடுகளை அளித்துள்ளனர்.
அதன்படி, 2022 ஆகஸ்ட் 17 ஆம் திகதி CD/183/2208 என்ற இலக்கத்தின் கீழ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மூலம் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன், 2025ஆம் ஆண்டில் ஜனாதிபதி செயலகத்துக்கும் இது குறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், 14 ஆண்டுகளாகக் காணாமல் போயுள்ள நிலூகா ராஜபக்ஷவுக்கு என்ன நேர்ந்தது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இதனால் அவரைப் பற்றி ஏதேனும் தகவல் அறிந்தால் அவரை கண்டறிய உதவுமாறு அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.