பிடியாணை உத்தரவு; ஓடிவந்து நீதிமன்றத்தில் ஆஜரான விமல் வீரவன்ச!
கைது செய்வதற்காகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சற்றுமுன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
பிரதிவாதியான விமல் வீரவன்ச சார்பில் ஆஜரான சட்டத்தரணி மஞ்சுள பத்திராஜ நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்து, தனது கட்சிக்காரரின் வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே அவரால் குறித்த நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமல் போனதாகத் தெரிவித்தார்.

அதற்கமைய, அவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையைத் திரும்பப் பெறுமாறு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
எணினும், அவரது கோரிக்கையை நாளை (22) சீராய்வு மனுவொன்றின் (Motion) ஊடாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரம அறிவித்தார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. விமல் வீரவன்ச இன்று (21) நீதிமன்றத்தில் ஆஜராகாமையினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் இளவரசர் செயித் அல்-ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சந்தர்ப்பத்தில், கொழும்பு தும்முல்லையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தைச் சுற்றியுள்ள வீதிகளை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் சந்தேநபராக விமல் வீரவன்ச பெயரிடப்பட்டுள்ளார்.
அது தொடர்பில் இன்று (21) நீதிமன்றத்தில் ஆஜராகாமையினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமவினால் இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.