அனோஜனை விடுவிக்க சவூதி ஆதரவளிக்கும்; பிரதியமைச்சர் முனீர்!
சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுவரும் அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் இன, மத வேறுபாடுகளின்றியும் கட்சி வேறுபாடுகளின்றியும் விடுதலை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
குறிப்பாக, ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பல்தரப்பட்டவர்கள் அவருடைய விடுதலைக்காக இராஜதந்திர ரீதியாகவும் நீதித்துறை ஊடாகவும் துரித முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அனைத்தின மக்களின் பிரார்த்தனை
இந்நாட்டின் அனைத்தின மக்களின் பிரார்த்தனையும் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் இதற்கு சவூதி அரேபியா நாடு ஆதரவு வழங்கும் என்ற மிகுந்த நம்பிக்கை இருக்கின்றது என்று சமய கலாசார விவகார பிரதியமைச்சர் முனீர் முழப்பர் தெரிவித்தார்.
நேற்று அக்குறணை, அஸ்னா ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதியமைச்சர் அக்குறணை ஜம்மிய்யதுல் உலமா சபையின் அலுவலகத்தில் பள்ளிவாசல் நிர்வாக சபையினூடான சந்திப்பில் ஈடுபட்டார். இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எமது நாட்டில் இருக்கின்ற தற்போதைய பதில் தூதுவருடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
நாளை திங்கட்கிழமை (இன்று) கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எமது நாட்டைச் சேர்ந்த சகோதரர் சிவராசா அனோஜன் விடுதலை பெற வேண்டும். இதற்கு சவூதி நாடு உதவும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
எமது சகோதரரின் விடுதலைக்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றார். சந்திப்பின்போது கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ரியாஸ் பாரூக், முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நாவஸ், வக்பு சபை தலைவர் எம்.மர்சாட் பாரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.