இலங்கை போக்குவரத்து சபைக்கு பல மில்லியன் ரூபா நாட்டம் ஏற்பட இதான் காரணமா?
தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக இலங்கை ரயில் சேவை மற்றும் இலங்கை போக்குவரத்து சபை என்பனவற்றுக்கு 3,447 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளாந்தம் முன்னெடுக்கப்படும் பயணங்கள் தடைப்பட்டுள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் இன்மையால், தொடருந்து திணைக்களத்திற்கு நாளாந்தம் 16.6 மில்லியன் ரூபா வருமானம் இல்லாமல் போயுள்ளது.
இதன்காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் 597.6 மில்லியன் ரூபா தொடருந்து திணைக்களத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் நாளாந்தம் 80 மில்லியன் ரூபா இலங்கை போக்குவரத்து சபையினால் ஈட்டப்பட்ட நிலையில் அந்த வருமானம் தற்போது இல்லாமல் போயுள்ளது.
இதற்கமைய தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு 2,880 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு மீள திறக்கப்பட்ட பின்னர் உடனடியாக சேவைகளை முன்னெடுக்க தயாராகவுள்ளதாக தொடருந்து திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை என்பவற்றின் சிரேஸ்ட பேச்சாளர்கள் தெரிவித்தனர்.