முன்பள்ளி ஆசிரியையும் அவரது கணவரும் அதிரடி கைது ; காரணம் என்ன?
மாதம்பிட்டி - மிஹிஜயசெவன பகுதியில் பல கோடி ரூபாய் பெறுமதியான ஒரு கிலோகிராமிற்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருளுடன், முன்பள்ளி ஆசிரியை ஒருவரும் அவரது கணவரும் பொலிஸாரினால் நேற்றிரவு (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாதம்பிட்டிய பொலிஸாரின் சுற்றிவளைப்பின்போது, முதலில் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்யப்பட்ட 32 வயதான ஆசிரியை மறைத்து வைக்கப்பட்டிருந்த 100 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

போதைப்பொருள் கடத்தல்
அத்துடன், அவர் தனது வேலைக்கு மத்தியிலும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பின்னர், ஒரு கிலோ 310 மில்லிகிராம் போதைப்பொருளுடன் வீட்டுக்கு வந்த அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில், சந்தேகநபரான கணவர் வெளிநாடொன்றிலுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரிடமிருந்து பொருட்களைப் பெறுபவர் என்றும், உயிரிழந்த 'கெசெல்வத்தே தினுக'வின் உதவியாளர் என்றும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட கணவர் இன்று (23) நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டபோது, ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.