இலங்கைக்கு உதவ தயார்! அவுஸ்திரேலிய தூதுவர்
சமூகப் பொருளாதார அபிவிருத்தி செயற்பாட்டில் இலங்கைக்கு உதவுவதற்கு அவுஸ்திரேலியா தயாராக இருப்பதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸிடம் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது அவுஸ்திரேலியாவுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
பல முனைகளில் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் நல்கிய உதவிகளுக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பாக,
கடல் மார்க்கமான சட்டவிரோத இடம்பெயர்வு, கொரோனாவை எதிர்த்துப் போராடுதல், கல்வி, தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி, பொருளாதார மற்றும் முதலீட்டுத் துறைகளில் அவுஸ்திரேலியாவால் ஈடுசெய்யப்பட்ட ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்தை வலியுறுத்தினார்.
அமைச்சரின் நியமனத்திற்காக தனது பாராட்டுக்களைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர் ஹொலி, சமூகப் பொருளாதார அபிவிருத்தி செயற்பாட்டில் இலங்கைக்கு உதவுவதற்கு அவுஸ்திரேலியா தயாராக இருப்பதாக மீண்டும் வலியுறுத்தினார்.