நாட்டில் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், அனர்த்தம் காரணமாக இதுவரை நான்கு பேர் காயமடைந்துள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

சீரற்ற காலநிலை
நிலவும் சீரற்ற காலநிலையினால் இதுவரை 504 குடும்பங்களைச் சேர்ந்த 1,790 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 வீடுகள் முழுமையாகவும், 193 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
5 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை 7 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, கேகாலை, பதுளை, கண்டி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு இரண்டாம் நிலை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.