ATM அட்டையில் இருந்து 4 லட்சம் எடுத்தவருக்கு விளக்கமறியல்
மொனராகலை,ஒக்கம்பிட்டிய நகரில் ஏ.டி.எம் அட்டையை பயன்படுத்தி 2 முறைக்கு 4 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்ற ஒருவர் சனிக்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளார்.
ATM அட்டையுடைய உரிமையாளர் விவசாய பணிகளுக்காக வாகனமொன்றை குத்தகைக்கு விட்டு, பெற்றுக்கொண்ட பணத்தை கணக்கில் வைப்பிலிட்டு திரும்பிச் சென்றுக்கொண்டிருந்த போது ஏ.டீ.எம் அட்டை தவறி கீழே விழுந்து காணாமல் போயுள்ளது.

இரகசிய இலக்கத்துடனான ஏடிஎம் அட்டை
இந் நிலையில் வங்கி கணக்கைச் சரிபார்த்தபோது, இரண்டு முறை நான்கு லட்சம் ரூபாய் எடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கடந்த நவம்பர் 3 ஆம் திகதி அன்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் இது தொடர்பாக வங்கியின் பாதுகாப்பு கேமராக்களை ஆராய்ந்து பார்த்து விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் தரையில் கிடந்த, ஒரு துண்டு காகிதத்தில் பின் எழுதப்பட்ட இரகசிய இலக்கத்துடனான ஏடிஎம் அட்டையை எடுத்ததாகவும் பின்னர் அதனூடாக பணத்தை பெற்றுக்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை (23) அன்று நீதவானின் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.