அண்ணன் - தம்பி உறவு கண்டு மகிழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி!
ஆளும் கட்சிகளாக யார் நல்ல திட்டத்தை கொண்டு வந்தாலும் எதிர்க்கட்சிகள் எப்போதுமே குற்றம் குறை கண்டு கொண்டே இருக்கும். அதுதான் கடந்த காலத்தில் நடந்து வந்தது.
ரணில் இணக்கம் காட்டிய இந்திய திட்டங்களுக்கு எதிர்ப்பை காட்டியவர்கள் தான் தேசிய மக்கள் கட்சியினர்.
ஆனால் இன்று நிலையே வேறு. காரணம் அதே விடயங்களை இந்தியா சென்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, எதுவித எதிர்ப்புகளும் இல்லாமல் ஏற்று அவற்றை செயல்படுத்த கையெழுத்துட்டுள்ளார்.
இது ஒரு பொதுவான விதி தான். நான் செய்தால் தவறு இல்லை, அதை இன்னொருவர் செய்தால்தான் தவறு என்பது போல் ஒரு விதி தான்.
ஜியோ பொலிடிகலில் எத்தனை நாடுகள் போட்டி போட்டாலும், இலங்கைக்கு பக்கத்தில் இருந்து, உடனடியாக உதவக்கூடிய நாடு இந்தியாதான். அதில் மாற்றுக் கருத்து இடமில்லை.
இலங்கை ஒரு சிறிய நாடாக இருக்கலாம், ஆனால் அது பூகோள ரீதியாக மிக முக்கியமான ஒரு பங்கை வகிக்கிறது. எனவேதான் உலக நாடுகள், இலங்கை மேல் அதிக அக்கறையோடு தம் பார்வையை செலுத்துகிறது.
கடந்த காலங்களில், இலங்கை பொருளாதார ரீதியாக வீழ்ச்சி அடைந்திருந்த போது, அதிகமாக கை கொடுத்த நாடு இந்தியா என்பதை மறுக்க முடியாது.
இந்தியா என்பது, இலங்கைக்கு அண்டிய வீடு போன்றது. துன்பம் வரும்போது கூப்பிடு தூரத்திலிருந்து உடனடியாக உதவக்கூடிய நாடு இந்தியாதான். எனவே அதன் தேவையை மட்டுமல்ல, பலத்தையும் இலங்கை அரசாங்கம் சரியாக எடை போட்டு உள்ளது.
எனவே தான் தமது பழைய கொள்கைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு இந்தியாவோடு கைகோர்த்துள்ளது.
இலங்கையின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் ஏனைய உதவிகள் தேவைப்படும் போது கை கொடுக்கக்கூடிய ஒரே நாடாக இந்தியாவே முதலில் நிற்கிறது.
சில தமிழர்களுக்கு, இலங்கை அரசு இந்தியாவோடு நெருக்கமான உறவை பேணுவதில் பெரிதாக விரும்பமில்லை என்றே பல பதிவுகள் மற்றும் கருத்துகள் மூலம் தெரிகிறது.
ஆனால் இந்திய அரசு, எப்போதுமே இலங்கை அரசுகளோடு மிக நெருக்கமான ஒரு அணுகுமுறையை ஏற்படுத்திக் கொள்ளவே தங்களது காய்களை நகர்த்தி வந்தனர். அதன் பிரதிபலனாக இப்போது அநுர குமார திசாநாயக்கவை அணைத்துக் கொள்ளும் போக்கு ஏற்பட்டுள்ளது.
அநுரவும் இந்தியாவோடு ஒத்துப் போகும் மனநிலைக்கு வந்துள்ளதாகவே தெரிகிறது. இந்தியா அவருக்கு கொடுத்த வரவேற்பு உண்மையில் மிகச் சிறப்பாகவே அமைந்துள்ளது.
சிங்கள மக்களும், இந்தியாவோடு ஏற்பட்டுள்ள நேசத்தை விரும்புவதாகவே அவர்களது பதிவுகளில் தெரிகிறது.
பக்கத்தில் உள்ள ஒரு நாட்டோடு பகைத்துக் கொண்டு, தூரத்தில் உள்ள நாட்டோடு நட்புக் கொள்வது ஆபத்துக்கு உதவாது என கருதுகிறார்கள்.
ஏழை நாடாக பார்க்கப்பட்ட இந்தியா, இன்று உலகம் வியந்து பார்க்கும் ஒரு வல்லரசு போலவே நிற்கிறது. எனவே தான் இலங்கைக்கு ஆபத்து நேர்கின்ற அனைத்து நேரங்களிலும் கரம் கொடுத்து இருக்கிறது. அது இப்போது மிக வலுவாக அதிகரித்திருப்பதையே காணக் கூடியதாக இருக்கிறது.
தேசிய மக்கள் சக்தி மேல் இந்தியாவுக்கு இருந்த பார்வை சற்று மாறி இருப்பதாகவே தோன்றுகிறது.
அதை இரு நாட்டுத் தலைவர்களும் வெகு கெட்டியாக முன்னெடுத்துச் செல்வார்கள் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை தெரிகிறது.
இலங்கைக்கோ உதவிகள் தேவை. இந்தியாவுக்கோ தனது பிராந்திய பாதுகாப்பு தேவை. இதுதான் இங்குள்ள தாரகை மந்திரம்.
எனவே இந்திய - இலங்கை உறவு பலமாகி, மின்சக்தி, எரிபொருள், பொருளாதாரம், சுற்றுலா ஆகியவற்றின் ஊடாக இரு நாடுகளின் உறவும் அதிகமாக வலுவாக உள்ளது. இதை ரணில் அவர்களும் ஆதரித்து உள்ளமை மன நிம்மதியை தருகிறது. என குறித்த கருத்துக்களை ஜீவன் பிரசாத் என்பவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.