இலங்கையின் இடைக்கால அரசின் பிரதமராக ரணில்! வஜிர தெரிவித்த தகவல்
இலங்கையின் இடைக்கால அரசின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) நாளை அல்லது நாளை மறுதினம் பதவியேற்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.
பிரதமராகப் பதவியேற்க தயாராக இருக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தெரிவித்ததாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும், இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்படடுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இன்று (11-05-2022) மாலை கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் பின்னர் ரணில் விக்ரமசிங்கவை இவ்வாறு பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்ததாக அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
இதேவேளை, பிரதமர் பதவிக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூன்று வேட்பு மனுக்களை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது.
இதன்படி, புதிய பிரதமராக விஜேதாச ராஜபக்ஷ, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்மொழியப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது