இலங்கையில் 6 பொலிஸ் அதிகாரிகளை குற்றவாளிகளாக அறிவித்த உயர் நீதிமன்றம்
கொட்டாவை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் ஆறு அதிகாரிகள், தனியார் பேருந்து உரிமையாளரை எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி கைது செய்ததன் மூலம் அவரது அடிப்படை உரிமைகளை மீறியதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சம்பவத்தில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட பொலிஸ் அதிகாரிகள், தங்கள் சொந்தப் பணத்திலிருந்து 1 மில்லியன் ரூபாயை மனுதாரருக்கு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அடிப்படை உரிமைகள் மனு
கொட்டாவை, பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை வழங்கினர்.
2021 ஜூலை 9 ஆம் திகதி இரவு, எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி கைது செய்யப்பட்டு, அடிக்கப்பட்டு, மண்டியிட வைக்கப்பட்டு, தலையில் துப்பாக்கியை வைத்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு, ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் மூலம் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக மனுதாரர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
வழக்கின் தீர்ப்பை அறிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர, முன்வைக்கப்பட்ட அனைத்து சமர்ப்பணங்களையும் ஆராய்ந்ததில், பிரதிவாதிகள் (பொலிஸ் அதிகாரிகள்) காவலில் இருந்தபோது மனுதாரரை கொடூரமான சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.