இலங்கையில் பல மாகாணங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான மழை ; பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
இலங்கையின் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடமேல் மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
எனவே, இவ்வாறான சந்தர்ப்பங்களில் மின்னல் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்ப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.