விதிமுறைகளை மீறி அல்குர்ஆன் இறக்குமதி; அரசாங்கம் அதிரடி நடவடிக்கை !
விதிமுறைகளை மீறி இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் , சுங்கத்தால் தடுத்துவைக்கப்பட்டுள்ள அல்குர்ஆன்களை இந்தியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்யத் தீர்மானிக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
சுங்கத்தின் விதிமுறைகளை மீறியே இந்த அல்குர்ஆன்கள் நாட்டுக்கு கொண்டுவரப் பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுங்கத்தின் விதிமுறைகளை மீறி இறக்குமதி
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (28) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பினபோது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்குர்ஆன்களை விடுவிக்குமாறு கோரி 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடிதமொன்றை அமைச்சர் சுனில் செனவியிடம் கையளித்திருந்தமை தொடர்பில், ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.
இதுதொடர்பில் அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில், அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்குர்ஆன்களை மீள் ஏற்றுமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அல்குர்ஆனிலுள்ள விடயங்களுக்கு அப்பால் அந்த பிரதிகளை நாட்டுக்குள் கொண்டுவந்த முறையில் தவறு இருந்தது. ஆகவே, சரியான முறையில் அல்குர்ஆன்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை.
சுங்கத்தின் விதிமுறைகளை மீறியே இந்த அல்குர்ஆன்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதனடிப்படையில் அந்த அல்குர்ஆன்களை இறக்குமதி செய்தவர்களே மீள் ஏற்றுமதி செய்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளர்கள்.
இவை இந்தியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.