அமெரிக்காவில் திடீர் விமான விபத்து ; வீதியின் நடுவே அவசரமாகத் தரையிறங்கிய விமானம்
அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் போக்குவரத்து நெரிசல் மிக்க வீதியொன்றில் அவசரமாகத் தரையிறங்கியது.
இந்தச் சம்பவத்தில் பல வாகனங்கள் சேதமடைந்ததுடன், பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
ஜோர்ஜியா மாகாணத்தின் கெய்ன்ஸ்வில் (Gainesville) பகுதியில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறிய ரக விமானம் ஒன்றின் எஞ்சினில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அதனைத் திட்டமிட்டபடி விமான நிலையத்தில் தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, விமானி விமானத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து, அருகிலிருந்த போக்குவரத்து நெரிசல் மிக்க பிரதான வீதியொன்றில் அவசரமாகத் தரையிறக்கியுள்ளார்.
வீதியில் தரையிறங்கிய போது, கட்டுப்பாட்டை இழந்த விமானம் அங்கிருந்த பல வாகனங்கள் மீது மோதியது.
இதில் வாகனங்களில் பயணித்த பலர் காயமடைந்துள்ளதாகத் தரையிறங்கிய இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்த காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.