எரிவாயு விநியோகத்திற்கும் QR குறியீட்டு முறையா? விடுக்கப்பட்ட கோரிக்கை
எரிவாயு விநியோகத்தில் நிலவும் இந்த முறைகேடுகளைத் தவிர்க்க உடனடியாக QR குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

விலை உயர்வு
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
சர்வதேச ரீதியிலான போர்ச் சூழல் எமக்கு இன்னும் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. நம்மிடம் உள்ள கையிருப்புகளைக் காட்டி முறையில் விலையை உயர்த்தும்போது, அது நுகர்வோரை நேரடியாகப் பாதிக்கின்றது.
நள்ளிரவில் விலையை உயர்த்துவதால், மறுநாள் காலை சந்தையில் உள்ள மருந்துகள் முதல் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் எகிறுகின்றன. அரசாங்கம் ஒன்றைச் செய்யும்போது, தனியார் துறையினரும் தன்னிச்சையாக விலைகளை உயர்த்தி இலாபம் ஈட்டுகின்றனர்.
எரிவாயு விநியோகத்தில் நிலவும் முறைகேடுகளைத் தவிர்க்க உடனடியாக QR குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும். இதன் மூலம் எரிவாயு நிறுவனங்களிடம் நுகர்வோர் தொடர்பான முறையான தரவுத்தளம் இருக்கும்.
சிலர் தவிக்கும் நிலையில், பலர் சிலிண்டர்களைச் பதுக்கி வைப்பது தடுக்கப்பட வேண்டும். பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் பிள்ளைகளுக்கு உணவு சமைக்கக் கூட இன்று எரிவாயு இல்லை.
சந்தைக்கு விடப்படும் ஒரு இலட்சம் சிலிண்டர்கள் 98 சதவீதமாவது உண்மையான நுகர்வோரைச் சென்றடைகிறதா என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லையெனில் இது ஒரு பாரிய சமூக அநீதியாகும். இலாபம் ஈட்டுவதற்காக நுகர்வோரை வாட்டும் இந்தச் செயல்களைத் தடுப்பது அவசியமாகும்.