விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் ; பொதுமக்களுக்கு சுகாதாரத் துறையின் எச்சரிக்கை
நீண்ட வாரயிறுதி விடுமுறையின்போது வீதி விபத்துகள் மற்றும் நீரில் மூழ்கும் சம்பவங்கள் அதிகரிப்பதற்கான ஏதுக்கள் உள்ளதாகச் சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் தலைவர், சமில சிறிதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத் தரவுகளை ஆய்வு செய்ததில், நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களில் வீதி விபத்துகள் மற்றும் நீரில் மூழ்கும் சம்பவங்கள் கணிசமாக அதிகரிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விசாக பண்டிகையை முன்னிட்டு வரும் இந்த விடுமுறையிலும் இத்தகைய ஆபத்துகள் அதிகரிக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
சாரதிகளின் கவனக்குறைவு, வாகனங்களில் பயணிப்போர் அல்லது பாதசாரிகளின் தவறுகள், வீதிகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் வாகனங்களில் ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சினைகள் போன்றவை விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அத்துடன், சில நீர்நிலைகளில் திடீர் நீரோட்டம் அல்லது நீர் மட்டம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால், நீரில் மூழ்கும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் மருத்துவ நிபுணர் சமில சிறிதுங்க எச்சரித்துள்ளார்.
எனவே, யாரேனும், நீரில் மூழ்கினால், உரிய மீட்புப் பயிற்சி இல்லாதவர்கள் அவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்து, உயிர் ஆபத்தில் சிக்க வேண்டாம் என்றும் சமூக மருத்துவ நிபுணர் சமில சிறிதுங்க வலியுறுத்தியுள்ளார்.