தேசிய மின் கட்டமைப்பில் இணையும் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள்
தேசிய மின் கட்டமைப்புக்கு ஆதரவளிப்பதற்காக, இலங்கையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படும் வர்த்தக அளவிலான ஆறு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளின் (BESS) முதலாவது தொகுதி இன்று (மே 30) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
தேசிய மின்சார வலையமைப்பில் 160 மெகாவாட் (MW) ஒருங்கிணைந்த திறன் கொண்ட 16 மின்கல சேமிப்பு அமைப்புகளை அறிமுகப்படுத்தும் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த ஆறு அலகுகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த திட்டத்திற்கான சர்வதேச போட்டி கொள்முதல் செயல்முறை கடந்த 2025 ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்டிருந்தது.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின்படி, இந்த ஆறு அலகுகளும் மஹாவா, வவுனியா, சுன்னாகம், கிளிநொச்சி, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவையில் உள்ள முக்கிய மின் பரிமாற்ற துணை மின் நிலையங்களுக்கு அருகில் நிறுவப்படவுள்ளன,
இந்த மின்கல அமைப்புகள் மதிய நேரங்களில், குறிப்பாக சூரிய மின் நிலையங்களில் இருந்து பெறப்படும் தேவைக்கு அதிகமான மின்சாரத்தைச் சேமித்து வைத்து, இரவில் மின்சாரத்திற்கான தேவை உச்சமடையும் காலப்பகுதியில் அதனை வெளியிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதன் ஒவ்வொரு அலகும் 40 மெகாவாட் அளவு மின்சாரத்தை ஒரு மணி நேரம் வரை சேமித்து வைக்கும் திறன் கொண்டதாகும், தேவைப்படும் போது 10 மெகாவாட் மின்சாரத்தை மின் கட்டமைப்புக்கு வழங்கும் திறன் கொண்டவையாகும்.
இதற்கமைய, இந்த ஆறு அமைப்புகளும் இணைந்து மின் தேவை அதிகமாக உள்ள காலப்பகுதியில் 60 மெகாவாட் மின்சாரத்தை விநியோகிக்கவுள்ளன.
கட்டமைப்பு அளவிலான இந்த மின்கல சேமிப்புத் தொழில்நுட்பம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த அமைப்புகள் எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய அமைப்பு இயக்குநரகம் (NSO) மூலம் இயக்கப்பட்டு நிர்வகிக்கப்படவுள்ளதோடு, இதற்கான பராமரிப்புப் பொறுப்புகள் அந்தந்த உற்பத்தியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களால் மேற்கொள்ளப்படவுள்ளன.