தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்
தமிழக சட்டப்பேரவையில் நீட் நுழைவுத்தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேறியது. தமிழக சட்டப்பேரவையில் இன்று மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ், நீட் தேர்வு முறைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்தார்.
இதற்கு திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், பாஜக எம்எல்ஏ ஒருவர் மட்டும் வெளிநடப்பு செய்தார். அமைச்சர் அருண்ராஜ் கூறுகையில்,

பாஜக எம்எல்ஏ ஒருவர் மட்டும் வெளிநடப்பு
“மருத்துவக் கல்வி என்பது வெறும் தொழில்முறை கல்வி மட்டுமல்ல, அது மனித உயிர்களை காப்பாற்றும் உன்னத பணிக்கான கல்வி.
அந்த கல்விக்கான வாய்ப்பு பொருளாதார வசதி உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல், திறமையும், அர்ப்பணிப்பும் கொண்ட ஒவ்வொருவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு நீட் தேர்வு முறையானது சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கு பதிலாக அவற்றை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த அரசு எந்த மாணவரின் கனவையும் பறிக்க விரும்பவில்லை. மாறாக, திறமையுள்ள ஒவ்வொரு மாணவரின் கனவும், அவர்களின் குடும்ப பொருளாதார பின்னணி காரணமாக தடைப்படக்கூடாது என போராடுகிறது.
மாணவர்களின் பனிரெண்டு ஆண்டு கால கல்வியை புறந்தள்ளி; ஒரு நாள் நுழைவுத் தேர்வு மாணவர்களின் உயர்கல்வியை தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நீட் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு வருவதுதான் என்றார்.
இதையடுத்து, நீட் தேர்விலிருந்து விலக்கு கோரிய தனித்தீர்மானம் பேரவையில் நிறைவேறியுள்ளது.