ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கம்பஹாவில் மக்கள் பேரணி
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டு வருட வெற்றிகரமான ஆட்சியைக் குறிக்கும் வகையில், "மக்கள் ஆட்சி - இரண்டு ஆண்டுகள் பலம். அனைவருக்குமான முன்னேற்றம்" என்ற தொனிப்பொருளின் கீழ் மாபெரும் மக்கள் பேரணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27) கம்பஹாவில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அறிவிப்பின்படி, குறித்த பேரணியானது அன்றைய தினம் பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், இதற்கான நேரலை ஒளிபரப்பும் அதே நேரத்தில் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் பேரணித் தொடரின் ஒரு கட்டமாகவே கம்பஹா நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டு உரையாற்றவுள்ள இந்தப் பேரணியில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே தொனிப்பொருளின் கீழ் நாட்டின் பல பகுதிகளிலும் இதற்கு முன்னர் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.