விநாயகர் சிலையை உடைத்த விசமிகள்; பிரதி அமைச்சர் பணிப்புரை
பலாங்கொட, உடகந்த பகுதியில் விநாயகர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு மலையக பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளதாகவும், இதுதொடர்பில் பிரதேச மக்கள் பலாங்கொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நால்வர் கைது
குறித்த விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதேச மக்கள் பிரதி அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பலாங்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பிரதி அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, சம்பவம் தொடர்பில் பலாங்கொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.