முக்கிய நபர்களின் மரணங்கள் குறித்து மக்கள் மத்தியில் சந்தேகம் ; சமூக வலைத்தளங்களில் வலுக்கும் சந்தேகம்
கொழும்பு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக அரசாங்கத்தை மட்டும் குறைகூறாமல், முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பத்தரமுல்லை சீலரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், அண்மைக்காலமாக நாட்டின் முக்கிய நபர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பது குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருவதாக குறிப்பிட்டார்.
கபில சந்திரசேனவின் மரணம், சிறைச்சாலைகளில் இடம்பெற்ற மரணங்கள் மற்றும் மத்திய வங்கி விவகாரங்களுடன் தொடர்புடைய அதிகாரிகளின் உயிரிழப்புகள் குறித்து மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

“இவையனைத்தும் தற்செயலானவையா? அல்லது இதன் பின்னணியில் கண்ணுக்குத் தெரியாத கரங்கள் செயல்படுகின்றனவா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உள்ளது,” என்று அவர் கூறினார்.
மேலும், இவ்வாறான சம்பவங்கள் குறித்து அரசாங்கத்தை மட்டும் விமர்சிப்பதை விட, உண்மையான காரணங்களை கண்டறியும் நோக்கில் சுயாதீன மற்றும் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக, கபில சந்திரசேன மீது வழக்குகள் நிலுவையில் உள்ள சூழலில் அவரது மரணம் வழக்கின் திசையையே மாற்றக்கூடியதாக இருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, இந்த விவகாரம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தி உண்மைகளை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலையை குறிப்பிட்ட சீலரத்தன தேரர், “மக்கள் அன்றாட உணவிற்கே கஷ்டப்படும் நிலையில் உள்ளனர்.
நாட்டுக்காக பணியாற்றிய அல்லது முக்கிய தகவல்களை அறிந்த நபர்கள் இவ்வாறு உயிரிழப்பது நல்ல அறிகுறி அல்ல,” என்று கூறினார்.
மேலும், தொடர்ச்சியாக இடம்பெறும் இவ்வாறான மர்ம மரணங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தையும் அரசாங்கத்தின் மீது அதிருப்தியையும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.