ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி ACMC மக்கள் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர் ஆர்ப்பாட்டம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருணாகல் மாவட்ட அமைப்பாளரும் பொல்கஹவெல பிரதேச சபை உறுப்பினருமான அன்பாஸ், ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி இன்று (20) செவ்வாய்க்கிழமை பொல்கஹவெலயில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்.
பிக்குமாருக்கு ஆதரவாகவும் ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரியும் விகாரமாக தேவி பூங்காவில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் பொல்கஹவெல பிரதேச சபைக்கு முன்பாக எதிர்கட்சியினர் ஆர்ப்பாட்டமொன்றை இன்று நடத்தினர்.

இதில் பொல்கஹவெல பிரதேச சபை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதன்போது, ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரியும் பிக்குமார்களுக்கு எதிரான செயற்பாடுகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கருப்புப் பட்டி அணிந்து போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொல்கஹவெல பிரதேச சபை உறுப்பினர் அன்பாஸூம் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொல்கஹவெல பிரதேச சபையில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் உறுப்பினர்கள் மூவர் உள்ளனர்.
இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளரும் பொல்கஹவெல பிரதேச சபை உறுப்பினருமான அன்பாஸ் மாத்திரமே இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டமை சுட்டிக்காட்டத்தக்கது.