வாகன உதிரிப்பாகங்களின் தரத்தை உறுதிப்படுத்த புதிய நடவடிக்கை
மோட்டார் வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்குப் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட இறக்குமதிப் பொருட்களுக்கு புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்தும் வகையிலான, 2026ஆம் ஆண்டின் 08ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் பரிந்துரைகளின் அடிப்படையில்; உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான போட்டியை உறுதி செய்தல், நுகர்வோர் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் சம்பந்தப்பட்ட இறக்குமதிப் பொருட்களுக்கான பரிசோதனை நடைமுறைகளைத் தயாரித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டே இந்த ஒழுங்குவிதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

முன்மொழியப்பட்டுள்ள புதிய ஒழுங்குவிதிகளின் கீழ்:
HS 4011.10.90 வகைப்பாட்டின் கீழ் உள்ள மோட்டார் வாகனங்களுக்கான இறப்பர் காப்பிடப்பட்ட கம்பிகளுக்கு ‘இலங்கைத் தரநிலை (SLS) 1212’ பொருந்தும்.
HS 4011.90.10 வகைப்பாட்டின் கீழ் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கான வளிநிரப்பு டயர்களுக்கு (Pneumatic tyres) ‘இலங்கைத் தரநிலை (SLS) 1347’ பொருந்தும்.
இந்தப் புதிய ஒழுங்குவிதிகள், 2026 அக்டோபர் 01ஆம் திகதியிடப்பட்ட 2508/27ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட நடைமுறையிலுள்ள ஒழுங்குவிதிகளை திருத்தியமைப்பதாக அமையும்.
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.