வவுனியா மற்றும் யாழ்ப்பாணச் சிறைச்சாலைகளில் ஆரம்பமான வேலைத்திட்டம்
சிறைச்சாலைகளில் அவசர நிலைமைகள் ஏற்படும்போது, பிரதேச ரீதியாக ஒருங்கிணைந்து அரச நிறுவனங்களுக்கு இடையே கூட்டுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான வேலைத்திட்டம் வவுனியா மற்றும் யாழ்ப்பாணச் சிறைச்சாலைகளை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தலைமையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவசர நிலைமைகள்
சிறைச்சாலைகளில் அவசர நிலைமைகள் உருவாகும் பட்சத்தில், பிரதேச மட்டத்தில் வலுவான ஒருங்கிணைப்பைப் பேணி விரைவாகச் செயற்படுவதும் கைதிகளின் நலன்புரி நடவடிக்கைகளை முறைப்படுத்துவதுமே இதன் முதன்மை நோக்கமாகும்.
தீவு முழுவதிலும் உள்ள அனைத்துச் சிறைச்சாலைகளையும் உள்ளடக்கும் வகையில் இக்கூட்டுக் கட்டமைப்பை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.
இந்நிகழ்வையடுத்து, வவுனியா மற்றும் யாழ்ப்பாணச் சிறைச்சாலைகளில் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்ட அமைச்சர், கைதிகளின் தேவைகளைக் கேட்டறிந்தார்.
இதன்போது பெண் பிரிவுகள், விளக்கமறியல் சந்தேக நபர்கள் தங்குமிடம் மற்றும் யாழ்ப்பாணச் சிறைச்சாலையின் சமையலறை ஆகியவற்றை அவர் விசேடமாகப் பார்வையிட்டார்.
அரசு பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமாவதால் நிலவும் பிரச்சினைகளுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்குள் உரிய தீர்வு காணப்படும் என அங்குள்ள கைதிகளைச் சந்தித்தபோது அமைச்சர் உறுதியளித்தார்.