இயற்கை பேரிடர்; நேபாளத்திற்கு உதவிக்கரம் நீட்டும் இந்திய விமானப்படை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்களை அனுப்ப இந்தியா தயாராகி வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசின் 'மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண' (HADR) திட்டத்தின் கீழ், மருந்துகள், உணவுப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய அவசர உதவித் தொகுப்பு நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணி
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவ, தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) வீரர்களை நேபாளத்திற்கு அனுப்புவது குறித்தும் அரசு பரிசீலித்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக இந்திய பிரதமர் மோடி தனது'எக்ஸ்' வலைத்தளத்தில்,
“நேபாள பிரதமர் பலேந்திர ஷாவுடன் உரையாடி, வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்தேன். இக்கட்டான சூழலில் நேபாளத்தில் உள்ள எங்கள் சகோதர சகோதரிகளுடன் இந்திய மக்கள் துணை நிற்கிறார்கள்.
நேபாளத்திற்குத் தேவையான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் எங்கள் குழுக்கள் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.