கொரோனாவால் கர்ப்பிணிகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை: 3% அதிகரிப்பு
கலிபோர்னியா பல்கலைக்கழகம் கொரோனா பாதிப்புக்குள்ளான 9 ஆயிரம் கர்ப்பிணிகளின் குழந்தை பிறப்பை ஆய்வு செய்ததில், குறைப்பிரசவ விகிதம் அவர்களிடம் 3% அதிகம் இருந்ததாக கண்டறிந்துள்ளது.
கலிபோர்னியாவின் குழந்தை பிறப்பு பதிவேடுகளில் ஜூலை 2020 முதல் ஜனவரி 2021 வரை பதிவு செய்யப்பட்ட குழந்தை பிறப்பு ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். இனம், நிறம், பொருளாதார நிலை ஆகியவற்றையும் கணக்கில் கொண்டு இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
அந்த சமயத்தில் 240,157 பிறப்புகள் பதிவாகியுள்ளன. அவர்களில் 9 ஆயிரம் பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்துள்ளது. அவர்களில் 11.8% பேருக்கு குறைப்பிரசவம் நடந்துள்ளது.
நோயில்லாதவர்களிடம் இவ்விகிதம் 8.7% மட்டுமே இருந்துள்ளது. லத்தீன் அமெரிக்கர்கள், அமெரிக்க இந்தியர்கள், ஹவாயியர்கள் ஆகியோரிடம் கர்ப்பக்கால கோவிட் பாதிப்பு அதிகம் இருந்துள்ளது.
இது பற்றி ஆய்வின் தலைவரும், கலிபோர்னியா பல்கலைக்கழக உதவி பேராசிரியருமான டெபோரா கூறும்போது, “கர்ப்பிணிகள் கோவிட் தொற்றுக்கு அதிக ஆபத்து உள்ளவர்களாக கருதப்படுகிறார்கள்.
கர்ப்பிணிகளுக்கு தொற்று மற்றும் குறைப்பிரசவம் ஏற்படாமல் தடுக்க வேண்டியதன் அவசியத்தை எங்களின் ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகிறது. அவர்களுக்கு தடுப்பூசிகள் போட வேண்டும்.
குறைப்பிரசவம் கர்ப்பிணிக்கும், சிசுவுக்கும் சவாலான விளைவுகளை ஏற்படுத்தும். 32 வாரங்களுக்கு முந்தைய குழந்தைப் பிறப்பு சிசுவுக்கு சிக்கல்களை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தை கொண்டுள்ளது.
கொரோனா பாதித்த கர்ப்பிணிகளில் இது 60% ஆக உள்ளது. 37 வாரங்களுக்கு முந்தைய குழந்தைப் பிறப்பு 40% ஆக உள்ளது“ என கூறினார்.