ஒரே பாலின திருமணத்துக்குக் கிடைத்த பிரம்மாண்ட அங்கீகாரம்
ஒரே பாலின திருமணச் சட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து உறுப்பு நாடுகளும் மதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
ஜேர்மனியில் திருமணம் செய்துகொண்ட இரண்டு போலந்து நாட்டவர்களின் திருமணத்தை அங்கீகரிக்க போலந்து மறுத்தமை குறித்து நீதிமன்றம் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.
போலந்துச் சட்டம் ஒரே பாலினத்தவர்களுக்கிடையேயான திருமணங்களை அனுமதிக்காத நிலையில், அவர்கள் நாடு திரும்பியபோது அத்திருமணத்தை அங்கீகரிக்க மறுத்தது தவறு என்று நீதிமன்றம் வலியுறுத்தியது

அத்துடன் இந்தத் தீர்ப்பு வெறும் சுதந்திரமாகப் பயணம் செய்வதற்கும், வசிப்பதற்கும் மட்டுமின்றி, தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையை மதிக்கும் அடிப்படை உரிமைக்கும் முக்கியமானது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்கள் உறுப்பு நாடுகளுக்குச் சென்று, அங்கே சாதாரண குடும்ப வாழ்க்கையை நடத்துவதற்கும், தாயகம் திரும்பிய பின்னரும் அதனைத் தொடர்ந்து பேணுவதற்கும் சுதந்திரம் உள்ளது என நீதிமன்றம் வலியுறுத்தியது.
ஒரு ஜோடி, ஒரே பாலின திருமணங்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்ட ஒரு உறுப்பு நாட்டில் குடும்ப வாழ்க்கையை உருவாக்கினால், தாயகம் திரும்பிய பின்னரும் அந்தக் குடும்ப வாழ்க்கையைத் தொடர முடியும் என்ற உறுதிப்பாடு இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.